மொழி கடந்த பார்வை!
Posted by Dr.N.Kannan 2.3.05 at Wednesday, March 02, 2005
வான் சிறப்புப்பாடும் வள்ளுவன் "நீரின்றி அமையாது உலகு" என்பான். காலையில் எழுந்தவுடன் இந்த நீலநிறக் கடலைக் காணாவிடில் கண்கள் பூத்துப்போகின்றன. எனது முதல் அனுபவம் திருச்செந்தூர். அது ரொம்ப ஆக்ரோஷமான கடல். கிட்டக்க நெருங்கவிடாத கடல். பயமுறுத்தும் கடல். ஆனால், ஜெர்மனியிலுள்ள பால்டிக் கடல் ரொம்ப சாது. அலையே அடிக்காது (அலையில்லாமல் என்னய்யா கடல்? என்று கேட்காதீர்கள் :-) இரண்டாம் பனிக்காலம் முடிந்து கடல் உள்வாங்கும் போது தோன்றியதுதான் பால்டிக். ஆகப்பெரிய ஆழமே 300 மீட்டர்தான். அதிலும் நிறைய வளைகுடாக்கள் உண்டு. கீல் பே (வளைகுடா) 13 கிமி நீளமுடையது. ஒரே ஒரு மாசம்தான் அது தன் சூரத்தனத்தைக்காட்டும். அது நவம்பரில். அப்போது புயல் அடிக்கும். அவ்வளவுதான். அதுக்கப்புறம், அது ஏரி மாதிரி சாதுவா இருக்கும். அங்குதான் என் வாழ்வின் எத்தனை பொழுதுகள்! இப்போது இந்தக் கொரியத் தென்கடல். இதுவும் வளைகுடா. ரொம்ப சாது. ஏதோ காலையில் பார்க்கும் போது ஜிலு, ஜிலு என்று ஆறுபோன்ற பிரம்பிப்பைத் தருகிறது! கடலை எவ்வளவு வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டிருக்கலாம். அது தரும் நிம்மதியே தனி.
Photo by N.Kannan
Posted by Dr.N.Kannan at Wednesday, March 02, 2005
நதி பவித்திரமானது. ஒரே நதியில் இருமுறை கால் வைக்க முடியாது என்பார்கள். அவ்வளவு பவித்ரமான நதியில் கூட கோடையில் தேங்கிய குட்டை துர்நாற்றமடிக்கும். ஆனால் உலகின் ஆகப்பெரிய நீர்க்கிட்டங்கியான கடல் எப்போதும் பவித்ரமாக இருக்கிறது. உலகின் அழுக்கெல்லாம் அங்கு வந்து சங்கமித்தும் அது புனிதமாயுள்ளது! தன்னை எப்போதும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளும் அழகிய வீட்டுக்காரி போல் அது எப்போதும் சுத்தமாய், பார்க்க லட்சணமாய், கல்யாணத்தன்று பார்த்த மனைவி போல் எப்போதும் புதிதாய் உள்ளது.
இக்கடலைப் பார்க்கும் போது, என் வாழ்வின் தொடக்கம் இங்குதான் என்பதை நம்பமுடியவில்லை. Desmond Morris எழுதிய Naked Ape எனும் புத்தகத்தில் நமது மூத்த சகோதரர்களான மனிதக்குரங்குகள் மயிரும் மட்டையுமாய் இருக்கும் போது நாம் வழிச்சுவிட்ட மாதிரி மயிரற்று நிர்வாணமாய் நிற்கிறோம் (சில இடங்களில் எதற்குத்தான் மிஞ்சிவிட்டனவோ?). இந்த நிர்வாணம் நமக்குக் கடல் தந்தது என்கிறார். எப்படியாயினும் நாம் கடலிலிருந்து வந்தவர்கள்தானே! அதுதான் கருப்பை நீர்க்குடத்தில் இன்றுவரை மிதக்கிறோம். நீருடன் நமக்குள்ள பந்தம் தேவ பந்தம் என்கிறார் வைரமுத்து! உண்மைதான். நீரின்றி அமையாது உலகு. கடல் காணாக்கண்ணனும் அயர்வுருவான்! கடலே நீ வாழ்க!
Photo by N.Kannan
Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
Make this Group yours too! |
MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
Make your contribution TODAY |